தமிழ் மண்ணில் ஏற்கனவே சிங்கார வேலர் போன்ற முன்னோடிகளால் விதைக்கப்பட்ட மார்க்சிய சித்தாந்தம் ஆல் போல் தழைத்து அருகு போல் பரவ பாடுபட்டவர்களில் ஏ,நல்லசிவன்,பி.ராமசந்திரன்,பி.பரமேஸ்வரன் ஆகிய மூவரையும் குறிப்பிடாமல் வரலாறு எழுதமுடியாது. இம்மூவரும் கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்ட காலத்தில் மார்க்சிய சித்தாந்தத்தின் சிறப்பை உணர்ந்து, தலைமறைவு வாழ்வை ஏற்றவர்கள். காவல் துறையின் சித்தரவதைக்கு ஆளானவர்கள். அரசியலில் ஈடுபடுபவர்களையும் குற்றவாளிபோல் நடத்திய பிரிட்டீஷ்,காங்கிரஸ் ஆட்சிகள் இருந்த காலத்தில் சிறைத் தண்டனையின் கொடுமைகளை அணுபவித்தவர்கள்.வெவ்வேறு கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் வந்திருந்தாலும் தமிழ் மண்ணில் மார்க்சிய சித்தாந்தத்தை விதைக்கிற கடமையை முதன்மைபடுத்தி பணியாற்றிவர்கள்.இம் மூவரும் களப்பணியை காட்டி சித்தாந்த துறையில் கவனம் செலுத்த தவறவில்லை, சித்தாந்த துறையை காட்டி களப்பணியை கைவிடவில்லை. புரட்சிகர தத்துவம் வழி காட்டாமல்,புரட்சிகர மாற்றம் ஏற்படாது என்பது கடந்தகால புரட்சியாளர்களின் அனுபவமட்டுமல்ல.இன்று மத்திய ஆசிய நாடுகளில் மக்களின் தன்னெழுச்சி பிரெஞ்சு புரட்சி போல் திசைமாறிப் போவதை காண்கிறோம்.இப்படி திசை மாறாமல் இலக்கை நோக்கி செல்ல வேண்டுமானால், மக்களைதிரட்டுங்கள்,அவர்கள் மனதில் விஞ்ஞான சோசலிச கருத்தை விதையுங்கள் என்று மார்க்ஸ் காட்டிய வழியை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
அந்த உண்மையை புரிந்த இந்த மூவரும் தமிழ் மண்ணில் சித்தாந்தப் போர் முனையில் நின்றனர்.பல வடிவங்களில் தலைதூக்கும் பூர்சுவா சித்தாந்தத்தின் பிடிப்பிலிருந்து உழைப்பாளி மக்களை மீட்க கிளர்ச்சிப் பிரச்சாரம் செய்தனர்.
அவர்கள் கட்சிக்குள் வந்த காலத்தில் சித்தாந்த குழப்பங்கள் மலிந்திருந்தின. சமூதாயப் புரட்சியின் தளபதி பாட்டாளி வர்க்கமே என்ற கருத்தை ஏற்க அறிவுலகம் தயங்கியது, பாட்டாளிவர்க்கத்திற்கு அரசியல் விழிப்புணர்வு அவசியம் என்பதையும் அவ்வளவாக அன்று உணரப்படவில்லை. உயிர்த்தியாகம் செய்யவல்ல அல்லது நடாளுமன்றத்தில் வாதாடவல்ல புரட்சிக்கரர்கள் போதும் என்ற நம்பிக்கை மேலோங்கி இருந்தது,ஜனநாயக மத்தியத்துவ அடிப்படை கொண்ட கட்சியின் சிறப்பை மக்களும் உணர அணுபவங்கள் தேவைப்பட்டது. கட்சிக்குள்ளேயும், வெளியேயும் வெகுஜன புரட்சிகட்சியின் அவசியத்தை உணர்த்தும் சித்தாந்தப் போர் அவசியமானது. இந்த மூவரும் வெகுஜன புரட்சி கட்சியின் அவசியத்தை உணர்ந்து உருவான மார்க்சிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். 1940களில் காந்தி மீது மாளாத பற்றுக் கொண்ட நல்ல சிவன் என்ற இளைஞன் திசையன்விளை என்ற ஊரில் கதர் கடையில் உதவி மேலாளராக இருந்தான்.100 ரூபாய் சம்பளம் (அன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூபாய் பன்னிரண்டு மட்டுமே இருந்தது என்றால் 100ரூபாயின் வாங்கும் சக்தியை அளந்து கொள்ளுங்கள்) அன்று கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சிக்குள் சோசலிசம் பேசும் குழுவாக இருந்தனர். தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் இலக்கியங்களை ரகசியமாக சுற்றுக்குவிட்டு விஞ்ஞான சோசலிச கருத்தை விதைக்கும் பணிசெய்து வந்தனர்.வி.பி.சி போன்ற முன்னோடிகளின் தொடர்பால் மார்க்சிச சித்தாந்தத்தின் அடிப்படைகளை நல்லசிவன் அறிய நேர்ந்தது. ரகசியமாக மார்க்சிச நூல்களை படிக்கிறார் என்றவுடன் நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்தது.மார்க்சிச தத்துவ பிடிமானமே அவரை வேலையை இழந்தவுடன் கம்யூனிஸ்டாக்கியது. பின்னர் மார்க்சிஸ்ட் கட்சி பக்கம் நிற்கவைத்தது.
கட்சியின் அடிப்படைக் கொள்கை வழி நின்று எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விளக்கிச் சொல்லும் திறன் பெற்றவர் தோழர் ஏ.என். இலங்கைப் பிரச்சனை தொடர்பாக கட்சிக்குள் விவாதம் எழுந்தபோது மார்க்சிய லெனினிய கோட்பாட்டின் அடிப்படையில் கட்சி அணிகளுக்கு கட்சியின் நிலையினை விளக்கி அணிகளை ஒற்றுமைமைப்படுத்திய பணியினை நாம் மறக்க இயலாது. கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று செயல்பட்ட காலத்தில் கூட்டு செயல்பாட்டின் அவசியத்தையும், அதன் வலிமையினையும் கட்சி செயல்பாட்டின் முக்கிய அம்சமாக முன்வைத்து பணியாற்றியதை நாம் இங்கே குறிப்பிட வேண்டும். கட்சியின் முடிவுகளை மேல்கமிட்டி முடிவு ஏற்றுக் கொள் என்று அதிகார தோரனையில் சொல்லாமல் சித்தாந்த அடிப்படையில் அவர் விளக்கும் விதம் கட்சிக்குள் கருத்தொற்றுமை செயலொற்றுமை இரண்டையும் உறுதிப்படுத்தியது.
விடுதலை போராட்ட காலத்திலே பி.ராமச்சந்திரன் மாணவனாக சென்னை வந்தவர் விடுதலை இயக்கத்தோடு மட்டுமல்ல, சென்னை நகர பாட்டாளி வர்க்க இயக்கத்தோடு இரண்டற கலந்தார். மார்க்சிசம் என்பது மேலோர்களின் கண்டுபிடிப்பல்ல பாட்டாளிவர்க்கத்தின் போராட்ட அணுபவத்தால் உருவான தத்துவம். புரிய இயலாத கருத்தல்ல.இதனை நன்கு உணர்ந்த பி.ஆர்.சி அதை எளிய முறையில் அணுபவங்களை இனைத்து கூறும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.அவரோடு பழகும் தொழிலாளர்கள்,மாணவர்கள், இளைஞர்கள் அவரை ஆசானாக கருதியதில் வியப்பில்லை.மார்க்சிஸ்ட் இதழுக்கு அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். கட்டுரைகள் அனைத்தும் கட்சியின் நடைமுறைகளை தீர்மாணிக்கும் தத்துவ கண்ணோட்டத்தை எடுத்துக் கூறுவதாகவே இருக்கும். மார்க்சிஸ்ட் இதழின் துவக்க கால ஆசிரியர் பரமேஸ்வரன் சென்னை நகர அரசியல் மற்றும் தொழிற்சங்க,இயக்கத்தில் முத்திரை பதித்த கிளர்ச்சிக் காரர்களில் ஒருவர்.பரமேஸ்வரன் என்ற காசா தைக்கும் சிறுவன் விஞ்ஞான அடிப்படைகொண்ட தத்துவ இதழின் ஆசிரியாக உயர்ந்தது ஒரு அதிசயமே.இந்த அதிசயம் நிகழ வழிவகுத்தது சென்னை நகர தொழிற்சங்க இயக்கம் என்றால் மிகையாகாது. வர்க்கப் போரரட்டங்களில் ஆர்வத்தோடு பங்கெடுத்தால் அதுவே பல்கலைகழகமாக ஆகிவிடும் என்ற மார்க்சிய பொதுக் கருத்திற்கு சான்றாக பரமேஸ்வரன் வாழ்வு அமைந்துவிட்டது. வியட்நாமின் ஹோசிமின், ரஷ்யாவின் மாக்சிம் கார்க்கி மட்டுமல்ல எந்த நாட்டிலும் முதலாளித்துவ சமூகமாக மாறுகிற கட்டத்தில் பாட்டாளி வர்க்கம் மிகச் சிறந்த சமூக அக்கறையுள்ள மனிதர்களை உறுவாக்கிவிடும். அவர்களது வாழ்வும், தியாகமும் உத்வேகமூட்டிவிடும். சென்னை நகரத்தின் வர்க்கப் போராட்ட களத்திலே உருவான மிகச்சிறந்த அரசியல் மற்றும் சமூக சேவகனாக பரமேஸ்வரன் வாழ்ந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் வேர்கள் பரவ சிந்தனோடு பரமேஸ்வரன் அளித்த பங்கினை வரலாறு கூறிக்கொண்டே இருக்கும் .
இந்த மூவரின் வாழ்க்கையும் சமுதாய மாற்றத்தின் மீது அக்கறைகொண்ட அனைவருக்கும் எடுத்துக்காட்டாகும்.
No comments:
Post a Comment